இன்றைய வாழ்க்கை முறையில் தவறான உணவுப்பழக்கம், தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. இதை இயற்கையாக மேம்படுத்த பலர் நாவல் பழத்தை உணவுப் பட்டியலில் சேர்த்து வருகின்றனர். நாவல் பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல வகைகளில் பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B உள்ளிட்ட பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்தை பல்வேறு வகைகளில் பாதுகாக்க உதவுகின்றன.
செரிமானத்துக்கு சிறந்த உதவி
நாவல் பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை சீராக்குகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை குறைத்து குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகளை குறைத்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை தூண்டி, நோய்களை எதிர்க்கும் திறனை அதிகரிக்க உதவுகின்றன.
கிருமி எதிர்ப்பு பண்புகள்
நாவல் பழம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய தன்மைகள் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் இலை மற்றும் பட்டை பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
கவனிக்க வேண்டியவை
ஆக்சலேட் உள்ளதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதைவிட, பகல் அல்லது மாலை நேரங்களில் எடுத்துக் கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
