புகைப் பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வரலாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை

உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் நுரையீரல் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 18 லட்சம் பேர் இந்த நோயால் உயிரிழக்கின்றனர்.

புகைப்பிடிப்பது இதற்கான முக்கிய காரணமாக இருந்தாலும், தற்போது புகைபிடிக்காதவர்களிடமும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக புற்றுநோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், தொடர்ந்து நீடிக்கும் சுவாசப் பிரச்சினைகள் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

புகைபிடிக்காதவர்களுக்கும் ஏன் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது?

சிகரெட் புகை மட்டுமே நுரையீரல் புற்றுநோய்க்கு காரணம் அல்ல. பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகளும் இதற்கு வழிவகுக்கலாம்.

காற்று மாசுபாடு, புகைபிடிப்பவர்களின் அருகே நிற்பது, பணியிடங்களில் ரசாயனப் பொருட்கள் மற்றும் தூசித் துகள்களின் தாக்கம், காற்றோட்டம் இல்லாத சமையலறைகளில் நீண்ட நேரம் புகை நிறைந்த சூழலில் சமைத்தல் இந்த காரணங்களால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்

பல வாரங்களாக தொடரும் இருமல், இருமலுடன் ரத்தம் வருதல், மார்பில் தொடர்ந்து வலி அல்லது அசௌகரியம், சாதாரண வேலைகளிலேயே மூச்சுத்திணறல், காரணமின்றி உடல் எடை குறைதல், எப்போதும் சோர்வாக இருப்பது, குரல் கரகரப்பு அல்லது குரலில் மாற்றம் இந்த அறிகுறிகள் எல்லாமே புற்றுநோயின் அடையாளம் என்றில்லை. இருப்பினும், நீண்ட நாட்கள் நீடித்தால் மருத்துவ பரிசோதனை அவசியம்.

இதையும் படிங்க : உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கேன்சர் வருமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல்

கடந்த சில ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக Low-Dose CT Scan மூலம் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிய முடிகிறது. எனவே, ஆரம்ப கட்டத்தில் நோய் கண்டறியப்பட்டால், சிகிச்சை வெற்றி மற்றும் நீண்டகால உயிர்வாழ்வு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைப்பது எப்படி?

புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்கவும்.

பிறர் புகைப்பிடிக்கும் புகையை சுவாசிப்பதைத் தவிர்க்கவும்.

சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யவும்.

அதிக காற்று மாசுபாடு உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பதை குறைக்கவும்.

ரசாயனங்கள் அல்லது தூசித் துகள்கள் நிறைந்த பணியிடங்களில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும்.

தொடர்ந்து இருமல் அல்லது மூச்சுப் பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அதிக ஆபத்தில் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு

மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, “புகைபிடிக்கவில்லை என்பதால் நுரையீரல் புற்றுநோய் வராது” என்ற எண்ணம் தவறானது. நீண்ட நாட்கள் நீடிக்கும் சுவாசப் பிரச்சினைகளை அலட்சியம் செய்யாமல், சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை செய்வது முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க : புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்ததால் 16 லட்சம் பேர் உயிரிழப்பு

Related Post

Latest News