துவைக்காத சாக்ஸை மீண்டும் மீண்டும் போட்டா இந்த நோய் வருமாம்! – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

துவைக்காத சாக்ஸ்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு கால் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.

வியர்வை நிறைந்த மற்றும் அழுக்கான சாக்ஸ்களைத் தொடர்ந்து அணிவதால் ‘அத்லட்ஸ் ஃபுட்’ எனப்படும் ஆபத்தான பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

‘அத்லட்ஸ் ஃபுட்’ பூஞ்சை தொற்று என்றால் என்ன?

பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் முதல் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் வரை அனைவரும் சாக்ஸ் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இருப்பினும், சாக்ஸை துவைக்காமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் தவறான பழக்கம் பலரிடம் உள்ளது.

ஈரப்பதம் மற்றும் வெப்பம் நிறைந்த சூழலில்தான் பூஞ்சைகள் அதிவேகமாக வளரும். நாள் முழுவதும் சாக்ஸ் அணிந்திருக்கும் போது கால்களில் ஏற்படும் வியர்வை, பூஞ்சை காளான்கள் வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கித் தருகிறது. இதனால் கால் விரல்களுக்கு இடையில் ‘அத்லட்ஸ் ஃபுட்’ எனும் பூஞ்சைத் தொற்று எளிதாகத் தொற்றிக் கொள்கிறது.

இதன் அறிகுறிகள் என்னென்ன?

கால் விரல்களுக்கு இடையில் கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு, பாத தோல் சிவந்து போதல், தோல் உலர்ந்து வெடித்து உரிதல், பாதங்களில் சிறிய அளவிலான நீர் கொப்புளங்கள் தோன்றுதல். காலணிகளை அணிவதிலும் நடப்பதிலும் கடுமையான அசௌகரியமும் வலியும் ஏற்படும்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டுதல்கள்

ஒரு முறை பயன்படுத்திய சாக்ஸை கண்டிப்பாகத் துவைத்து, வெயிலில் நன்றாக உலர்த்திய பிறகே மீண்டும் பயன்படுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் வியர்வை நிறைந்த சாக்ஸ்களை உடனடியாகக் கழற்றிவிட வேண்டும்.

கால்களைக் கழுவிய பிறகு, குறிப்பாகக் கால் விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியைத் துணியால் நன்றாகத் துடைத்து உலர்வாக வைத்திருக்க வேண்டும். காலணிகளையும் அவ்வப்போது வெயிலில் உலர்த்தி, காற்றோட்டமாகப் பராமரிப்பது பூஞ்சை காளான்கள் உருவாகுவதைத் தடுக்கும். அலட்சியமாக இருந்தால் இத்தொற்று நாளடைவில் தீவிரமான தோல் நோய்களுக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது.

Related Post

Latest News