தினமும் 2 கிராம்பு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்

கிராம்பு என்பது இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான நறுமண மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். உணவின் மணத்தையும் சுவையையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கிராம்பில் உள்ள யூஜினால் என்ற இயற்கை வேதிப்பொருள், ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தினமும் மிதமான அளவில் கிராம்பை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கக்கூடிய சில ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்.

வாய் ஆரோக்கியம்

கிராம்பை வாயில் போட்டு மெல்வதால் வாய் துர்நாற்றம் குறையும். இதில் உள்ள யூஜினால் மற்றும் பிற இயற்கைச் சேர்மங்கள் சில வகை பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும். பல் வலி போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படிங்க : இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்… இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம்!

செரிமானத்தை மேம்படுத்தும்

பாரம்பரிய மருத்துவ முறைகளில் கிராம்பு நீண்ட காலமாக செரிமான பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் செயல்பாட்டை தூண்ட உதவும்.
அஜீரணம் குறையும். வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லை நீங்கும்.

கல்லீரல் ஆரோக்கியம்

கிராம்பில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்கள் இருப்பதால் அவை கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது. இதனால் கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறுகின்றன. இதில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

கிராம்பை எப்படி சாப்பிடவேண்டும்?

கிராம்பை அப்படியே வெறும் வாயில் போட்டு லேசாக கடித்து, அப்படியே வாயில் அடக்கி வைத்துக் கொண்டு, அப்படியே அதன் உமிழ்நீரை விழுங்கிக் கொள்ளலாம். இதுதான் கிராம்பு சாப்பிட மிகச்சிறந்த வழி. கிராம்பை வெறும் வாயில் சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க : கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் இவ்ளோ நன்மைகளா?

கிராம்பை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

கிராம்புக்கு பல நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. அதிகமாக சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், ஒவ்வாமை, வாயில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

மருத்துவர்களின் ஆலோசனை என்ன?

உணவில் ஒரு நாளைக்கு 1 முதல் 2 கிராம்பு வரை மிதமான அளவில் பயன்படுத்துவது நல்லது. ஆனால், உடல்நலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் அல்லது தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

Related Post

Latest News