இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்… இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம்!

இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் உருவாக உதவும் முக்கிய தாது. ஹீமோகுளோபின் தான் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. இதன் அளவு குறைந்தால், உடலின் இயல்பான செயல்பாடுகளும் பாதிக்கப்படத் தொடங்கும்.

இரும்புச்சத்து குறைந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

இரும்புச்சத்து குறைபாடு நீடித்தால், உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைந்து, திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதன் விளைவாக, வேலை செய்யும் திறன் குறையலாம். குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் கற்றல் திறன் பாதிக்கப்படலாம். கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால சிக்கல்கள் அதிகரிக்கலாம். நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி தொற்றுகள் ஏற்படலாம். முடி உதிர்தல், நகங்கள் உடைதல் மற்றும் நாக்கு வீக்கம் போன்ற பிரச்சனைகளும் உருவாகலாம்.

இதையும் படிங்க : சமைப்பதற்கு முன் அரிசியைக் கழுவுவதால் ஊட்டச்சத்துக்கள் குறையுமா? உண்மை என்ன?

இரும்புச்சத்து குறைபாட்டின் 5 முக்கிய அறிகுறிகள்

  1. தொடர்ந்து சோர்வாக இருப்பது

நன்றாக தூங்கிய பிறகும் உடல் சோர்வாக இருப்பது, சிறிய வேலைகளுக்குக் கூட அதிக களைப்பு ஏற்படுவது போன்றவை இரும்புச்சத்து குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள் ஆகும். உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

  1. சருமம் வெளிறி காணப்படுதல்

முகம், உதடுகள், ஈறுகள் அல்லது கண் இமைகளின் உட்புறம் வழக்கத்தை விட வெளிறிய நிறத்தில் இருந்தால், ஹீமோகுளோபின் அளவு குறைந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

  1. அடிக்கடி தலைவலி அல்லது தலைச்சுற்றல்

மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காதபோது, தலைவலி, லேசான தலைச்சுற்றல் அல்லது திடீரென எழுந்து நிற்கும்போது மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவை அடிக்கடி தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

  1. மூச்சுத்திணறல்

படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது சிறு உடற்பயிற்சி செய்தாலே மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தால் இதையும் அலட்சியப்படுத்தக் கூடாது. உடலின் ஆக்ஸிஜன் சுமக்கும் திறன் குறைந்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

  1. கவனம் செலுத்துவதில் சிரமம்

மறதி, கவனச்சிதறல், மந்தமாக இருப்பது போன்றவை சிலருக்கு இரும்புச்சத்து குறைபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். மூளை சரியாக செயல்பட தொடர்ந்து ஆக்ஸிஜன் கிடைப்பது அவசியம் என்பதால், இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த கூடாது.

இதையும் படிங்க : உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து வருவதை உணர்த்தும் அறிகுறிகள்!

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் இரும்புச்சத்து குறைபாட்டால் மட்டுமே ஏற்படும் என்று கூற முடியாது. இருப்பினும், அவை நீண்ட நாட்களாக தொடர்ந்து இருந்தால் அல்லது அன்றாட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கினால், மருத்துவரை சந்திப்பது மிகவும் முக்கியம்..

இரும்புச்சத்து நிறைந்த முக்கிய கீரைகள்

முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை ஆகியவற்றில் இரும்புசத்து நிறைந்துள்ளது. இந்த கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது ரத்தசோகை ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.

Related Post

Latest News