8 மணி நேரம் கண்டிப்பா தூங்கணும். இல்லைன்னா என்ன நடக்கும்? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலர் வேலைப்பளு, மனஅழுத்தம் மற்றும் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் போதுமான தூக்கத்தை இழக்கின்றனர். தூக்கத்தின் அவசியத்தை பெரும்பாலும் அலட்சியப்படுத்துகின்றனர். போதுமான தூக்கம் இல்லையென்றால் உடலின் பல முக்கிய செயல்பாடுகளையும் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

8 மணி நேர தூக்கம் ஏன் அவசியம்?

தினமும் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதில் சராசரியாக 8 மணி நேர தரமான தூக்கம் உடல் மற்றும் மனநலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நாம் தூங்கும் போது உடலும் மூளையும் மட்டும் ஓய்வெடுப்பதில்லை. உடலில் சேதமடைந்த செல்கள் மற்றும் திசுக்கள் சீரமைக்கப்படுகின்றன. ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலைப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு அமைப்பும் வலுப்பெறுகிறது. இதனால் அடுத்த நாள் உடல் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

நல்ல தூக்கம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நல பாதிப்புகளின் அபாயத்தையும் குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : இரவில் படுத்தவுடன் தூக்கம் வரணுமா? இதை மட்டும் பண்ணுங்க போதும்.!

நோய் எதிர்ப்பு சக்தி

தூங்கும் போது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதனால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்கொள்ளும் திறன் மேம்படுகிறது. அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையலாம்.

மனநலத்திற்கு கிடைக்கும் பலன்கள்

தரமான தூக்கம் மனஅழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது. மனநிலையை சீராக வைத்திருக்கவும், அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்புடன் செயல்படவும் நல்ல தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரும ஆரோக்கியம்

தூங்கும் நேரத்தில் உடலின் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இதனால் சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்க உதவுகிறது. கண்களுக்கு கீழே கருவளையம் மற்றும் முக சோர்வு போன்ற பிரச்சினைகளும் குறையலாம்.

இதையும் படிங்க : இரவு 7 மணிக்குப் பிறகு இந்த 5 உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏன் தெரியுமா?

நல்ல தூக்கம் கிடைக்க என்ன செய்யலாம்?

தினமும் ஒரே நேரத்தில் படுக்கச் செல்வதும், ஒரே நேரத்தில் எழுவதும் உடலின் இயல்பான தூக்கச் சுழற்சியை சீராக வைத்திருக்க உதவுகிறது. படுக்கும் முன் அதிகமாக உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பதும், காபி, டீ, மது போன்றவற்றை இரவு நேரத்தில் குறைப்பதும் நல்ல தூக்கத்திற்கு உதவலாம்.

மேலும் படுக்கையறையை அமைதியாக, குளிர்ச்சியாக மற்றும் இருட்டாக வைத்திருப்பது தூக்கத்தின் தரத்தை உயர்த்தும். படுக்கும் முன் நீண்ட நேரம் மொபைல், டேப்லெட் அல்லது லேப்டாப் போன்ற திரைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் முக்கியம். தினசரி உடற்பயிற்சி செய்வது, மனஅழுத்தத்தை குறைக்கும் பழக்கங்களைப் பின்பற்றுவது போன்றவை தரமான தூக்கத்தைப் பெற உதவும்.

Related Post

Latest News