மனித உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய்த்தொற்றுகளிலிருந்து காக்கவும் நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கிரேப்ப்ரூட் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
சிவப்பு குடைமிளகாய்
சிவப்பு குடைமிளகாயில் ஆரஞ்சு பழத்தை விட அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. மேலும், இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
புரோக்கோலி
வைட்டமின் ஏ, சி, இ மற்றும் நார்ச்சத்து நிறைந்த புரோக்கோலி உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனை லேசாக வேக வைத்து சாப்பிடுவது சிறந்தது.
பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் போன்ற கந்தகச் சேர்மங்கள் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. இதய ஆரோக்கியத்திற்கும் இது பயனுள்ளதாக கருதப்படுகிறது.
இஞ்சி
இஞ்சி உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும், தொண்டை வலி மற்றும் குமட்டலை தணிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.
பசலைக் கீரை
வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பசலைக் கீரை உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
தயிர்
நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிர் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடல் ஆரோக்கியம் மேம்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடையும்.
பாதாம் பருப்பு
வைட்டமின் இ நிறைந்த பாதாம் பருப்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தினமும் சில பாதாம்களை சாப்பிடுவது நல்லது.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் செலினியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க உதவுகின்றன.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற சேர்மம் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவக்கூடும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள ஃப்ளவனாய்டுகள் மற்றும் ஈஜிசிஜி (EGCG) போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலை நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
பப்பாளி
ஒரு சிறிய பப்பாளி பழமே தினசரி தேவையான வைட்டமின் சி சத்தை வழங்கக்கூடியது. செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
கிவி பழம்
கிவி பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவடைகிறது.
கோழி இறைச்சி
கோழி மற்றும் வான்கோழி இறைச்சியில் உள்ள வைட்டமின் பி6, உடலில் புதிய சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக உதவுகிறது. சிக்கன் சூப் சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளை குறைக்க உதவலாம்.
ஷெல் மீன்கள்
சிப்பி, நண்டு, லாப்ஸ்டர் போன்ற கடல் உணவுகளில் துத்தநாகம் (Zinc) அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு முக்கியமான சத்தாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
