மீல்மேக்கர் என்பது சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். இது இறைச்சி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளதால், சுவையான கிரேவி, பிரியாணி, மற்றும் வறுவல் செய்யப் பயன்படுகிறது சுவையில் அப்படியே கறி போன்ற உணர்வைத் தரும் இந்த மீல் மேக்கர், உண்மையில் உடலுக்கு ஆரோக்கியமானதா? இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? யார் சாப்பிடலாம், யார் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
மீல்மேக்கர் எப்படி தயாரிக்கப்படுகிறது?
சோயா பீன்ஸிலிருந்து சோயா எண்ணெய் எடுப்பதற்காக அவை நன்றாகப் பிழியப்படும்போது, அதிலிருந்து கிடைக்கும் சாறு மற்றும் எஞ்சிய பகுதியைக் கொண்டுதான் இந்த மீல் மேக்கர் தயாரிக்கப்படுகிறது. இது சோயா தாவரத்திலிருந்து பெறப்படும் மிக அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். சோயா பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மீல் மேக்கரில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.
இதையும் படிங்க : பூசணி விதைகளின் மருத்துவ நன்மைகளும், அதைச் சாப்பிடும் வழிகளும் இதோ.!
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
மீல் மேக்கரில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் நிறைவுறா கொழுப்புகள் (Unsaturated Fats) இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்க உதவுகின்றன. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற இருதய நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் எடையைக் குறைக்க உதவும்
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மீல் மேக்கர் ஒரு சிறந்த உணவாகும். இதில் அதிக புரதம் இருப்பதால், இதனைச் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு நீண்ட நேரம் இருக்கும். இதனால் தேவையின்றி நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை குறையும்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள் உடலில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகின்றன. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சட்டென உயர்வது தடுக்கப்பட்டு, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
இதையும் படிங்க : உடல் எடையைக் குறைக்கும் ஆரோக்கியமான கஞ்சி : 10 நிமிடத்தில் தயார் செய்யலாம்
ஆண்களுக்கான பாதிப்புகள்
உடலுக்கு இவ்வளவு நன்மைகளைத் தந்தாலும், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது சில பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. சோயாவில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜன் பெண்களின் ஹார்மோனை ஒத்தது. ஆண்கள் இதனை அளவுக்கு அதிகமாகத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து, விந்தணு குறைபாடு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சோயா பால் போன்ற தயாரிப்புகளை அதிகமாக எடுத்தால் குமட்டல், தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே, எப்போதாவது ஒருமுறை உணவாகச் சாப்பிடலாமே தவிர, தினமும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
