இன்றைய அவசர உலகில் ஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுப்பது பலருக்கும் சவாலாக உள்ளது. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், கோடைகாலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் ‘ராகி கஞ்சி’ ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். மிகக் குறைந்த நேரத்தில், எளிமையான முறையில் சத்துக்கள் நிறைந்த ராகி கஞ்சியை எப்படித் தயாரிப்பது என்பதை இதில் பார்ப்போம்.
ராகி கஞ்சி செய்யத் தேவையான பொருட்கள்
ராகி மாவு (கேழ்வரகு மாவு): 1 பெரிய ஸ்பூன்
தண்ணீர்: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு
சின்ன வெங்காயம்: பொடியாக நறுக்கியது (சுவைக்கேற்ப)
பச்சை மிளகாய்: 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை: சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 1½ கிளாஸ் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிப்பதற்குள், மற்றொரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் ராகி மாவை நன்றாக ஜலித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து, கட்டிகள் ஏதும் இல்லாதவாறு ஸ்பூன் அல்லது கரண்டியால் நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பவரா நீங்கள்? எச்சரிக்கும் புதிய ஆய்வு
இப்போது, அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில், நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள ராகி விழுதை மெதுவாக ஊற்ற வேண்டும். அடிபிடிக்காமல் இருக்க கரண்டியால் கைவிடாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நன்றாக கொதி வந்த பிறகு, அடுப்பை அணைத்து விடலாம். கஞ்சி சற்று ஆறியதும், இதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இப்போது சுடச்சுட ஆரோக்கியமான ராகி கஞ்சி தயார்.
ராகி கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்
கேழ்வரகு அல்லது ராகி என்பது இயற்கையிலேயே மனித உடலுக்கு நல்ல ஆற்றலையும், குளிர்ச்சியையும் தரக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவாகும். ராகிக்கு உடலின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தும் குணம் உண்டு. கோடைகாலத்தில் இதைப் பருகுவதால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக இருக்கும்.
இதையும் படிங்க : சங்கு பூ டீயில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? எப்படி செய்வது?
ராகியில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளதால், இதைச் சாப்பிட்ட பிறகு நீண்ட நேரத்திற்குப் பசி எடுக்காது. தேவையில்லாத நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைத் தடுத்து, உடல் எடையை வேகமாகக் குறைக்க இது உதவுகிறது. இது வயிற்றில் எளிதில் செரிமானமாகக்கூடியது மற்றும் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை நாள் முழுவதும் வழங்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
