அமெரிக்க அரசு தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களான Intel Corporation, IBM உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் நேரடியாக பங்குகள் வாங்கி முதலீடு செய்து வருவது எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் என பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த சில மாதங்களாக முக்கிய தொழில்நுட்ப மற்றும் கனிம வள நிறுவனங்களில் பங்குகளை வாங்கி வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க அரசு Intel நிறுவனத்தில் சுமார் 9.9% பங்குகளை வாங்கி 8.9 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. தற்போது அந்த முதலீட்டின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், Quantum Computing துறையில் செயல்படும் பல நிறுவனங்களிலும் அரசு முதலீடு செய்துள்ளது. இதில் IBM நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர், மேலும் பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இனி இவர்களுக்கு வங்கி லோன் கிடைப்பது கடினம்.. RBI புதிய விதி!
இதுகுறித்து பேசிய பில் கேட்ஸ், “அரசு ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக மாறிவிட்டால், அதே நிறுவனத்திற்கு எதிராக இருக்கும் மற்ற நிறுவனங்களுக்கு சம வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். நல்ல தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களை விட, அரசு பங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்களே முன்னுரிமை பெறும் அபாயம் உள்ளது” என்று கூறினார்.
மேலும், தொழிற்சாலைகள், சிப் உற்பத்தி மையங்கள் போன்ற பெரிய திட்டங்கள் 20 ஆண்டுகளை நோக்கி திட்டமிடப்படுகின்றன. ஆனால் அரசின் கொள்கைகள் அடிக்கடி மாறினால் நிறுவனங்களுக்கு முதலீடு செய்வது சிக்கலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க அரசு தற்போது செயற்கை நுண்ணறிவு துறையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக AI நிறுவன தலைவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
