தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பால் மற்றும் தயிரின் விலையைத் தனியார் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு நாளை (ஜூலை 9) முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகிறது.
எந்தப் பாலுக்கு எவ்வளவு உயர்வு?
டோண்டு பால் (Toned Milk – நீல நிற பாக்கெட்): 500 மி.லி பாக்கெட் ரூ. 29-லிருந்து ரூ. 31 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (ஒரு லிட்டர் விலை ரூ. 54-லிருந்து ரூ. 57 ஆக உயருகிறது).
நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardised Milk – பச்சை நிற பாக்கெட்): 500 மி.லி பாக்கெட் ரூ. 35-லிருந்து ரூ. 37 ஆக அதிகரித்துள்ளது. (ஒரு லிட்டர் விலை ரூ. 66-லிருந்து ரூ. 69 ஆக உயருகிறது).
ஃபுல் கிரீம் பால் (Full Cream Milk – ஆரஞ்சு நிற பாக்கெட்): 500 மி.லி பாக்கெட் ரூ. 39-லிருந்து ரூ. 41 ஆக உயர்ந்துள்ளது. (ஒரு லிட்டர் விலை ரூ. 73-லிருந்து ரூ. 76 ஆக உயருகிறது).
தயிர் விலை உயர்வு: ஹட்சன் தயிர் (500 கிராம்) ரூ. 44 ஆகவும், ஆரோக்கியா தயிர் (500 கிராம்) ரூ. 42 ஆகவும் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
விலை உயர்வுக்கு காரணம் என்ன?
மேற்கு ஆசியப் பகுதியில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் உள்நாட்டில் சரக்கு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இவற்றுடன், பால் உற்பத்திக்குத் தேவையான மாட்டுத் தீவனம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால், விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?
தனியார் நிறுவனங்களின் இந்த விலை உயர்வுக்குத் ‘தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், வரவிருக்கும் நாட்களில் சந்தையில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
