உங்களிடம் இன்னும் ரூ.2,000 நோட்டுகள் இருக்கிறதா? ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த 2023-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த பெரும்பாலான நோட்டுகள் வங்கி முறைக்குத் திரும்பிவிட்டன. இந்த நிலையில், இன்னமும் தங்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ள பொதுமக்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி இன்று (வியாழக்கிழமை) முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புழக்கத்தில் இருந்த மொத்த நோட்டுகளில் 98.47 சதவீதம் தற்போது வங்கிக்கு திரும்பிவிட்டன.

அறிவிப்பு வெளியான போது புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளின் அளவு, தற்போது வெறும் ரூ.5,451 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது, வெறும் 1.53 சதவீத நோட்டுகள் மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் எஞ்சியுள்ளன.

இந்நிலையில், ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இந்தியாவில் எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்து இந்தியா போஸ்ட் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்கலாம் என்றும் அவ்வாறு அனுப்பும் பணத்திற்கு அதற்குரிய தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Post

Latest News