ஒரே மாமரத்தில் 350+ வகை மாம்பழங்கள்! உலகையே வியக்க வைத்த இந்தியாவின் மேங்கோ மேன்

இந்தியாவில் கோடை காலம் என்றாலே மாம்பழங்களின் மணமும் சுவையும் அனைவரின் நினைவுக்கும் வருகிறது. உலகம் முழுவதும் இந்திய மாம்பழங்களுக்கு தனி வரவேற்பு இருப்பது அறிந்த விஷயமே. ஆனால் ஒரே ஒரு மாமரத்தில் 350-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகளை வளர்த்து உலகையே வியக்க வைத்த இந்திய விவசாயி பற்றி தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மலிஹாபாத் பகுதியைச் சேர்ந்த ஹாஜி கலிமுல்லா கான் (80). இவர் “இந்தியாவின் மாங்கோ மேன்” என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றிருந்தாலும், மாம்பழ சாகுபடியில் அவர் நிகழ்த்திய சாதனை உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலிஹாபாத் பகுதி இந்தியாவின் மாம்பழத் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்த கலிமுல்லா கான், மாம்பழ சாகுபடியில் புதுமை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் 1987ஆம் ஆண்டு தனது முயற்சியை தொடங்கினார். பாரம்பரியமான ‘ஒட்டுதல்’ (Grafting) முறையை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி, ஒரே மரத்தில் பல்வேறு மாம்பழ வகைகளை வளர்க்கும் சாதனையை நிகழ்த்தினார்.

அவரது தோட்டத்தில் உள்ள ஒரு மாமரம் இன்று 350-க்கும் அதிகமான வகை மாம்பழங்களை காய்க்கிறது. ஒவ்வொரு கிளையிலும் வெவ்வேறு ரக மாம்பழங்கள் விளைவதால், சுவை, நிறம், மணம் மற்றும் வடிவத்தில் தனித்துவமான பல வகைகளை ஒரே மரத்தில் காண முடிகிறது.

அவர் உருவாக்கிய சில புதிய ரகங்களுக்கு ஐஸ்வர்யா ராய், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் மற்றும் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களையும் சூட்டியுள்ளார். இவருடைய சாதனையை பாராட்டி இந்திய அரசு 2008ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. மேலும், அவரது பெயர் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

Related Post

Latest News