அம்மா உணவகத்தில் மோசடி: 1 ரூபாய் இட்லியை 10 ரூபாய்க்கு விற்ற ஊழியர்கள் டிஸ்மிஸ்

அம்மா உணவகம் திட்டம் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. முதலில் இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் சில ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் தமிழகத்தின் மிகவும் பிரபலமான மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களும் இதை சமூக நல மாதிரியாகப் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் 1 ரூபாய் இட்லிகள், அங்கு சாப்பிட வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல், சில தனியார் ஓட்டல்களுக்கு மொத்தமாக பார்சல் செய்து விற்பனை செய்யப்படுவதாகவும், அங்கு 10 ரூபாய் வரை விற்கப்பட்டு லாபம் பார்க்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து, நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் கோவில்பட்டி அம்மா உணவகத்தில் அதிரடியாக நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விசாரணையைத் தொடர்ந்து, இந்த மோசடியில் தொடர்புடைய அம்மா உணவக ஊழியர்களான கங்கா மற்றும் சங்கரேஸ்வரி ஆகிய இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, கோவில்பட்டி அம்மா உணவகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Post

Latest News