குற்றால சீசனுக்காக புதிய கட்டுப்பாடு… கேரளா செல்லும் கனரக லாரிகளுக்கு நேர வரம்பு விதிப்பு!

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் 400-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் மூலம் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குற்றால அருவிகளில் சீசன் தொடங்கி, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதன் காரணமாக குற்றாலம் மற்றும் புளியரை சோதனைச் சாவடி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும், போக்குவரத்து சீர்மையையும் உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, குற்றால சீசன் முடியும் வரை கேரளா நோக்கி செல்லும் கனிம வளம் ஏற்றிய கனரக வாகனங்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மற்றும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை இயக்கப்படக் கூடாது.

மேலும், வார இறுதி நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் திங்கட்கிழமை காலை 11 மணி வரை எந்த கனரக வாகனங்களும் இயக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புதிய நேர வரம்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உத்தரவை மீறி செயல்படும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Related Post

Latest News