தொண்டையில் சளி இல்லாமல் தொடர்ந்து இருமல் ஏற்படுவது வறட்டு இருமல் எனப்படுகிறது. இது இரவு நேரங்களில் தூங்க விடாமல் தொந்தரவு செய்யும். சளி, ஒவ்வாமை, அல்லது சில மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாக இது ஏற்படலாம்.
வறட்டு இருமல் என்றால் என்ன?
சளி வெளியேறாமல், தொண்டை மற்றும் சுவாசக் குழாயில் எரிச்சல் அல்லது அரிப்பு போன்ற உணர்வுடன் ஏற்படும் இருமல் வறட்டு இருமல் என கூறப்படுகிறது. தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். தொடர் இருமலால் மார்பு தசைகளில் வலி அல்லது இறுக்கம் போன்ற அறிகுறிகளும் சிலருக்கு ஏற்படலாம்.
வறட்டு இருமலுக்கு முக்கிய காரணங்கள் என்ன?
சாதாரண சளி, காய்ச்சல், தொண்டை அழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட தொற்றுகளுக்குப் பிறகும் இருமல் சில காலம் தொடரலாம். தொற்று குணமான பிறகும் சுவாசக் குழாய் அதிக உணர்திறன் கொண்டதாக மாறுவதால் வறட்டு இருமல் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு இந்த இருமல் சில வாரங்கள் நீடிக்கலாம். வைரஸ் தொற்றுக்குப் பிறகு நீடிக்கும் இருமல் பொதுவாக சுவாசப் பாதையில் ஏற்பட்ட எரிச்சலுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
இதையும் படிங்க : இரவு உணவை தவிர்க்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
ஆஸ்துமா
சிலருக்கு ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறியாக இருமல் மட்டுமே இருக்கலாம். குறிப்பாக இரவு நேரங்களில் இருமல் அதிகமாக இருக்கும். குளிர்ந்த காற்று, தூசி, புகை, சில ஒவ்வாமை, உடற்பயிற்சி அல்லது சிரிப்பு போன்றவை சிலருக்கு இருமலைத் தூண்டலாம்.
அமிலத்தன்மை
வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாயை நோக்கி மேலே வரும்போது அது இருமலை தூண்டக்கூடும். இதனால் இரவு நேரங்களில் அல்லது படுக்கும்போது வறட்டு இருமல் அதிகமாக ஏற்படலாம். நெஞ்செரிச்சல் மற்றும் அமிலம் மேலே வருவது போன்ற அறிகுறிகளும் சிலருக்கு ஏற்படலாம்.
ஒவ்வாமை
சிகரெட் புகை, தூசி, ரசாயனப் புகை உள்ளிட்டவற்றை சுவாசிப்பதால் சுவாசக் குழாயில் எரிச்சல் ஏற்பட்டு வறட்டு இருமல் வரலாம். புகைப்பிடிப்பவர்களுக்கு நீடித்த இருமலும் ஏற்படக்கூடும். மகரந்தத் தூள், தூசி, பூஞ்சை மற்றும் செல்லப்பிராணிகளின் தோல் துகள்கள் போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமையும் வறட்டு இருமலுக்கு காரணமாகலாம்.
வறட்டு இருமலை குறைக்க என்ன செய்யலாம்?
ஒரு தேக்கரண்டி தேனை நேரடியாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது தேநீரில் கலந்து குடிக்கலாம். குறிப்பாக இரவு நேர வறட்டு இருமலைத் தணிக்க இது உதவக்கூடும்.
மஞ்சளை வெதுவெதுப்பான பாலில் கலந்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து குடிக்கலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற சேர்மத்திற்கு அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் வறட்டு இருமலை சரிசெய்யும்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து தேநீர் போல குடிக்கலாம். அதனுடன் சிறிதளவு தேன் சேர்ப்பதும் சிலருக்கு தொண்டை எரிச்சலை நீக்கும்.
வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பது தொண்டை எரிச்சல் மற்றும் அசௌகரியத்தைத் தணிக்க உதவும்.
இதையும் படிங்க : உங்களுக்கு முட்டை சாப்பிட பிடிக்குமா? இந்த விஷயத்தில் கவனமா இருங்க!
இரவு நேர வறட்டு இருமலை குறைக்க என்ன செய்யலாம்?
படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக்கொள்வது அல்லது தேநீரில் தேன் கலந்து குடிப்பது உதவக்கூடும். புதினா தேநீர் குடிப்பதும், வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிப்பதும் இரவில் ஏற்படும் தொண்டை எரிச்சலைக் குறைக்க உதவலாம்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
பொதுவாக பல வறட்டு இருமல்கள் தாமாகவே குறைந்துவிடும். ஆனால் 3 வாரங்களுக்கும் மேலாக இருமல் நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
