திருமணத்திற்கு மறுப்பு ; காதலியை பைக்கில் இழுத்துச் சென்ற காதலன் – பீகாரில் நடந்த அதிர்ச்சி

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய காதலியை, இளைஞர் தனது பைக்கில் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, சம்பந்தப்பட்ட இளைஞரும் இளம்பெண்ணும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அரசு ஊழியராக பணியாற்றி வரும் அந்த இளைஞர், சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை சந்திக்க ராஜ்கிர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த இளைஞர் தனது பைக்கில் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது பைக்கை நிறுத்த இளம்பெண் முயன்றுள்ளார். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் அவர் வேகமாக இயக்கியதால், இளம்பெண் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் திருமணம் தொடர்பான தகராறின் பின்னணியில் நடந்ததாகவும், குற்றச்சாட்டுக்குள்ளான நபர் அரசு ஊழியர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Post

Latest News