ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 15 கிலோ குட்கா கடத்தி வந்த இருவர் கைது!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே அரசுப் பேருந்தில் 15 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகில், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று காலை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை நிறுத்திச் சோதனையிட்டதில், அதில் சட்டவிரோதமாக 15 கிலோ குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அதனைக் கடத்தி வந்த இருவரையும் காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (49) மற்றும் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (47) என்பதும், அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து இந்த குட்காவைக் கடத்தி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Post

Latest News