பேருந்தில் நகை திருடிய 2 பெண்கள் கைது! 8.5 சவரன் தங்க நகைகள் மீட்பு!

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் தங்க நகைகளைத் திருடிய இரு பெண்களை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

வேலூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் தொடர்ச்சியாகத் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, வேலூர் வடக்கு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வேலூர் சாத்துப்பாளையத்தைச் சேர்ந்த திவ்யா என்பவர் பெங்களூரிலிருந்து பேருந்தில் வேலூர் திரும்பியுள்ளார். அவர் தனது கைப்பையில் வைத்திருந்த 8.5 சவரன் தங்க நகைகள், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கிப் பார்த்தபோது காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து திவ்யா அளித்த புகாரின் பேரில், வேலூர் வடக்கு காவல் துறையினர் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், நகைகளைத் திருடியது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கட்டமடுவு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (27) மற்றும் சவுந்தர்யா (29) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த 8.5 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Latest News