தமிழகத்தில் இருந்து ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்களை அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய தமிழக அரசு 3 மாத காலத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர்த்து பிற மாநிலங்களுக்கு இந்தத் தடை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு சார்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களும், தனியார் வீட்டு வசதி மற்றும் வர்த்தக ரீதியிலான கட்டுமானப் பணிகளும் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. இதன்காரணமாக கட்டுமானப் பொருட்களின் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், அதிக பாரத்துடன் அதிவேகமாகச் செல்லும் இந்த ராட்சத லாரிகளால் எல்லைப் பகுதிகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தொடர் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் இந்தத் தடை அவசியமாகிறது.
