அரசுப் பேருந்துகளில் பயணிகள், நடத்துநர், ஓட்டுநர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும், இதனால் பேருந்திற்குள் தேவையற்ற இரைச்சல் நிலவுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகத் போக்குவரத்து துறைக்கு புகார்கள் குவிந்தன. இதனை கட்டுப்படுத்த போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜ், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
பேருந்திற்குள் பயணம் செய்யும் போது செல்போன் ஸ்பீக்கரை ஆன் செய்து சத்தமாக பேசுவதையும் வீடியோக்கள் மற்றும் பாடல்களைப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
பயணிகள் தங்களது செல்போன்களில் பாடல்கள் அல்லது வீடியோக்கள் பார்க்கும் போது கட்டாயம் ஹெட்போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பேருந்து பயணத்தின் போது மற்ற பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் போது அதிக சத்தத்துடன் பாடல்களைப் போடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நெறிமுறைகள் அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு அதிகாரிகளுக்குப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இதே போன்ற நடைமுறை மெட்ரோ பயணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு பேருந்துகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
