மொட்டை அடித்தால் ரூ.15 ஆயிரம் தருவதாக கூறி ஏமாற்றிய ஆசாமி : சேலம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா பரவலைத் தடுக்க மொட்டை அடித்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனக் கூறி, பெண்களை ஏமாற்றி மொட்டை அடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த அனைவரும் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

மொட்டை அடிப்பவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக பெண்களுக்கு ₹15,000, ஆண்களுக்கு ₹6,000 வழங்கப்படும் என அந்த நபர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அந்தத் தகவலை உண்மை என நம்பிய அப்பகுதி மக்கள் சிலர் மொட்டை அடிக்கத் தயாராகினர். அதில் முதற்கட்டமாக 3 பெண்கள் உடனடியாக மொட்டை அடித்துக் கொண்டனர்.

பணத்தைப் பெறுவதற்காக அந்த நபரின் தொலைபேசி எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தது. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை அந்தப் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், போன் செய்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related Post

Latest News