செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் ‘சாட்ஜிபிடி’ சேவை, உலகம் முழுவதும் திடீரென முடங்கியுள்ளது. இதனால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பயனர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சாட்ஜிபிடி தளத்திற்குள் நுழைய முடியாமலும், கேள்விகளுக்குப் பதில்களைப் பெற முடியாமலும் பயனர்கள் தவித்து வரும் நிலையில், இக்கோளாறு குறித்து ஓபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து வருகிறது.
இன்று பிற்பகல் முதல் டவுன்டெக்டர் மற்றும் சமூக வலைத்தளங்களான எக்ஸ் தளத்தில் சாட்ஜிபிடி குறித்த புகார்கள் குவியத் தொடங்கின. இணையதளம் மற்றும் மொபைல் செயலி ஆகிய இரண்டிலுமே இந்தச் சிக்கல் நீடித்து வருகிறது. இலவச கணக்கு வைத்துள்ள பயனர்கள் மட்டுமின்றி, கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் ‘பிளஸ்’ பயனர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
