வேலை செய்யும் இடத்தில் தமக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றும், தோற்றத்தில் சிறுவன் போல் காட்சியளிப்பதாகக் கூறி ஒதுக்கப்பட்டதாகவும் உணர்ந்த நபர் ஒருவர், தாடி வளர்ப்பதற்காக ரூ.10 லட்சம் செலவிட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
30 வயதைக் கடந்த நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தாடி இல்லாமல் பார்ப்பதற்கு சிறுவன் போல இருப்பதால், அவரது அலுவலகத்தில் சக ஊழியர்களால் உருவகேலிக்கு ஆளானார். இதனால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்.
இதையடுத்து, தான் முதிர்ச்சியாகவும் கம்பீரமாகவும் தெரிய வேண்டும் என்பதற்காக அடர்த்தியான தாடி வளர்க்க அவர் முடிவு செய்தார். இதற்காக தாடி வளர்க்கும் எண்ணெய்கள், வைட்டமின் மாத்திரைகள், முடி வளர்ச்சியைத் தூண்டும் போன்ற மருந்துகள் எனப் பல வழிகளில் முயன்றுள்ளார். ஆனால் எதுவுமே அவருக்கு பலன் தரவில்லை.
பின்னர், அவர் அறுவை சிகிச்சை மூலம் தாடி மாற்றும் சிகிச்சையை (Beard Transplant) மேற்கொள்ளத் துணிந்தார். இதற்காக சுமார் 10,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹10 லட்சம்) வரை செலவழித்தார். 5 மணி நேரம் நடந்த இந்தச் சிகிச்சையில், அவரது தலையின் பின்புறத்தில் இருந்த முடிகள் எடுக்கப்பட்டு தாடி பகுதியில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன.
சிகிச்சைக்குப் பிறகு அடர்த்தியான தாடியுடன் காட்சியளிக்கும் அந்த நபருக்கு அலுவலகத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சக ஊழியர்கள் கிண்டல் செய்வதை நிறுத்தினர். பிறகு பணியிடத்தில் அவருக்கு மரியாதையும் தன்னம்பிக்கையும் அதிகரித்தது.
இது குறித்து அந்த நபர் கூறியதாவது : “ரூ.10 லட்சம் என்பது பெரிய தொகைதான். ஆனால், அது எனது தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, தொழிலிலும் வாழ்க்கையிலும் எனக்குப் புதிய மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது. எனவே இந்தச் செலவு எனக்கு முற்றிலும் பயனுள்ளதே” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
