இனி ரூபாய் நோட்டுகள் கிழியாது; வருகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ; தயார் செய்யும் RBI

இந்திய ரூபாய் நோட்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் முயற்சியாக, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் காகித நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

₹10 மற்றும் ₹20 நோட்டுகளில் சோதனை

இந்தியாவில் ₹10 மற்றும் ₹20 நோட்டுகளே பொதுமக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், அவை விரைவாக சேதமடைகின்றன. இதனை சரிசெய்ய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ₹10 மற்றும் ₹20 மதிப்புள்ள நோட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ஏன் முக்கியம்?

தற்போது இந்திய ரூபாய் நோட்டுகள் பருத்தி அடிப்படையிலான சிறப்பு காகிதத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பாலிமர் நோட்டுகள் பாதுகாப்பு தரமான சிறப்பு பிளாஸ்டிக் தாள்களில் அச்சிடப்படுகின்றன.

இதனால், காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பல மடங்கு நீண்ட காலம் பயன்படுத்தலாம். தண்ணீரில் விழுந்தால் சேதமடையது. ரூபாய் நோட்டுகளை மடிப்பதால் ஏற்படும் சேதங்கள் குறையும். அழுக்கு குறைவாக ஒட்டுவதால் சுத்தமாக இருக்கும். போலி நோட்டுகள் தயாரிப்பதை மிகவும் கடினமாக்கும்.

இந்தியாவிலேயே உற்பத்தி

இதுவரை பாலிமர் தாள்களுக்கு வெளிநாடுகளை இந்தியா பெரும்பாலும் சார்ந்திருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலேயே பாலிமர் தாள்களை உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கலாம். மேலும், நீண்ட காலத்தில் உற்பத்தி செலவை குறைக்க முடியும்.

இது இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு தரத்தை மேலும் உயர்த்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து RBI இதுவரை அதிகாரப்பூர்வ கால அட்டவணையை வெளியிடவில்லை.

Related Post

Latest News