மலேசியா மற்றும் இந்தோனேசியாவை தாயகமாகக் கொண்ட ரம்பூட்டான் பழம், தற்போது தமிழகத்தின் கேரளா ஒட்டிய எல்லைப் பகுதிகளிலும், மலைப் பிரதேசங்களிலும் பரவலாகக் கிடைக்கிறது. இந்த பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது.
ரம்பூட்டான் பழத்தில் உள்ள சத்துக்கள்
ரம்பூட்டான் பழத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. 100 கிராம் ரம்பூட்டான் பழத்தில் கலோரிகள் 82, கார்போஹைட்ரேட் 20.8 கிராம், நார்ச்சத்து 0.9 கிராம், வைட்டமின் C வைட்டமின் B3, B5 மற்றும் B6, இரும்புச்சத்து , பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.
இதையும் படிங்க : ப்ளூபெர்ரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?
ஆண்களுக்கான நன்மைகள்
ரம்பூட்டானில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் நீர்ச்சத்து, உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் C, ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தவும், சோர்வை நீக்கவும் உதவுகின்றன.

பெண்களுக்கான நன்மைகள்
பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க இதில் உள்ள இரும்புச்சத்து உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் C, நாம் சாப்பிடும் உணவில் இருந்து இரும்புச்சத்தை உடல் எளிதில் உறிஞ்சத் துணைபுரிகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பெண்களின் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது, குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இது நல்லது.
இதையும் படிங்க : நட்ஸை ஊறவைத்து சாப்பிட்டால்தான் அதிக நன்மையா? எப்படி சாப்பிட்டால் நல்லது?
சர்க்கரை நோயாளிகள் ரம்பூட்டான் சாப்பிடலாமா?
ரம்பூட்டான் பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதனை அளவோடு மட்டுமே சாப்பிட வேண்டும். ஆனால், ரம்பூட்டான் பழத்தின் தோல் மற்றும் விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாகப் புதிய மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
சருமப் பொலிவை தரும்
ரம்பூட்டானில் வைட்டமின் C மற்றும் மாங்கனீசு அதிக அளவில் உள்ளதால், இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமையைத் தக்கவைக்கிறது. இதிலுள்ள நீர்ச்சத்து வறண்ட சருமத்தை நீக்கி, எப்போது ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
ரம்பூட்டான் பழத்தின் தீமைகள்
ரம்பூட்டான் உடலுக்கு நல்லது என்றாலும், அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம். இதில் சர்க்கரை அளவு அதிகம் என்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
நன்கு பழுக்காத பச்சை நிற ரம்பூட்டான் பழங்களைச் சாப்பிட்டால் சிலருக்குத் தலைச்சுற்றல் அல்லது தொண்டை அரிப்பு ஏற்படலாம். இதன் விதைகளை நேரடியாகப் பச்சையாக மென்று சாப்பிடுவது ஆபத்தானது. ஏனெனில் இதில் நச்சுத்தன்மை உள்ளதாகக் கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
