சமைப்பதற்கு முன் அரிசியைக் கழுவுவதால் ஊட்டச்சத்துக்கள் குறையுமா? உண்மை என்ன?

சமைப்பதற்கு முன்பு அரிசியைத் தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு, அதனை பிறகு சமைப்பார்கள். ஆனால், இப்படி அரிசியைக் கழுவுவது உண்மையிலேயே உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா? இதனால் அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வீணாகிறதா? என்பது குறித்து பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் நீடித்து வருகின்றன. இது தொடர்பாக ‘லைவ் சயின்ஸ்’ ஆய்வறிக்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக உணவு விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல்களை பார்ப்போம்.

சமைப்பதற்கு முன்னதாக அரிசியைத் தண்ணீரில் போட்டு நன்றாக அலசும்போது, அதிலிருந்து வெளியேறும் நீரில் வெறும் தூசியும் அழுக்கும் மட்டுமே போவதில்லை என்று ‘லைவ் சயின்ஸ்’ ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. அரிசியை நாம் தண்ணீரை ஊற்றி கழுவும் போது, அதிலிருக்கும் முக்கிய சத்துக்களும் சேர்த்துதான் வெளியேற்றப்படுகின்றன.

இருப்பினும், இது மனித உடலில் பெரிய அளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டையோ அல்லது பாதிப்பையோ ஏற்படுத்தாது என்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உணவியல் நிபுணர் இவாஞ்சலின் மான்சியோரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்காலச் சூழலில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால், நாம் உண்ணும் உணவுகளிலும் நுண்-பிளாஸ்டிக் கலந்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆனால், சமைப்பதற்கு முன்பு அரிசியைக் கழுவுவது இந்த ஆபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது என்று 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

அரிசியைச் சமைப்பதற்கு முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவுவதன் மூலம், அதில் படிந்துள்ள நுண்-பிளாஸ்டிக்கின் அளவை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கணிசமாகக் குறைக்க முடியும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. எனவே, அரிசியை சமைப்பதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு முறை மென்மையாகக் கழுவுவதே போதுமானது.

Related Post

Latest News