தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் குளிர்காற்று – பகல் வெப்பநிலை குறையும்!
வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 80 முதல் 100 கி.மீ தொலைவில் பரவலான மேகக்கூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மேகமூட்டமும், காற்றின் ஈரப்பதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் பகல் நேர வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.
இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, சிவகங்கை மற்றும் விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். குறிப்பாக, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
