மருத்துவப் படிப்புக்கான நீட் மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை செய்த குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, இந்தியாவில் தேர்வு மையம் ஒதுக்குவதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள அபுதாபியில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாணவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த மாணவர் மறுதேர்வுக்கான புதிய நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்தபோது, அவருக்கு அபுதாபியில் உள்ள ‘அபுதாபி இந்தியன் ஸ்கூல்’ தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த மாணவர் தனது விண்ணப்பத்தில் முதல் விருப்பமாக நாக்பூரையும், அடுத்ததாக வர்தா மற்றும் பண்டாராவையுமே தேர்வு செய்திருந்தார்.
இதுகுறித்து மாணவரின் தந்தை முகமது தாலிப் கூறுகையில், “இந்த குளறுபடியால் எங்கள் குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது. என் மகனை தேர்வு எழுத வெளிநாட்டுக்கு அனுப்பும் வசதி எங்களிடம் இல்லை. அவரிடம் பாஸ்போர்ட் கூட கிடையாது. மேலும், அவசர அவசரமாகப் பயண ஏற்பாடுகளைச் செய்ய இப்போது நேரமும் இல்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் உதவி மையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு, உரிய சரிபார்ப்புக்குப் பின் திருத்தப்பட்ட புதிய நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு மகாராஷ்டிர முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் அனீஸ் அகமதும் என்.டி.ஏ அமைப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
