“நோ சொன்னால் நோதான்!” மேகதாது விவகாரத்தில் அதிரடி காட்டிய துரைமுருகன்

“மேகதாது விவகாரத்தில் நாங்கள் நோ சொன்னால் நோதான், இதுதான் ஷார்ட்” என்று நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அதிரடியாக தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி மக்கள் மீதான தனது பாசத்தையும், மின்சார விநியோகம் குறித்தும் மனம் திறந்து பேசினார்.

பெற்ற பிள்ளையைப் போன்ற காட்பாடி தொகுதி!

செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய துரைமுருகன், “சாதாரண துரைமுருகனை ஊரறிய, உலகறிய செய்த தொகுதி காட்பாடி தொகுதிதான். இந்த தொகுதிக்கு என் வாழ்நாளின் இறுதி வரை நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். என் தொகுதியை பெற்ற பிள்ளையைப் போல் நான் நேசிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேகதாது விவகாரத்தில் திட்டவட்டம்

தமிழக – கர்நாடக இடையே நீடித்து வரும் மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், மிக சுருக்கமாகவும் அழுத்தமாகவும், “மேகதாது விவகாரத்தில் நாங்கள் நோ சொன்னால் நோதான்… இதுதான் ஷார்ட்” என்று தமிழக அரசின் உறுதியான நிலப்பாட்டை வெளிப்படுத்தினார்.

மின்வெட்டா? மின்கொட்டா?

தொடர்ந்து தமிழகத்தின் மின்சார விநியோகம் குறித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். “திமுக ஆட்சிக்கு வந்தால் தான் மின்வெட்டு ஏற்படும் என்று முன்பு கூறினார்கள். ஆனால், இப்போது தடையற்ற மின்சார விநியோகத்தைப் பார்த்துவிட்டு, ‘இது மின்வெட்டா அல்லது மின்கொட்டா என்று விமர்சித்தவர்கள் தான் கூற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Post

Latest News