கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஷிகெல்லா (Shigella) என்ற பாக்டீரியா தொற்றால் 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஷிகெல்லா தொற்று என்றால் என்ன?
ஷிகெல்லா என்பது குடல் மற்றும் செரிமான அமைப்பை பாதிக்கும் ஒரு வகை பாக்டீரியா தொற்று ஆகும். இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. அசுத்தமான உணவு அல்லது குடிநீர் மூலம் இந்த நோய் பரவலாம். இந்த நோய் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பு, கைகளை சுத்தமாக கழுவாதது போன்ற காரணங்களாலும் தொற்று ஏற்படுகிறது.
முக்கிய அறிகுறிகள் என்ன?
ஷிகெல்லா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு பொதுவாக 1 முதல் 2 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அடிக்கடி வயிற்றுப்போக்கு, இரத்தம் கலந்த மலம். கடுமையான வயிற்றுவலி மற்றும் பிடிப்பு, காய்ச்சல் மற்றும் நடுக்கம், குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, உடல் எடை குறைதல், நீரிழப்பு.
இதையும் படிங்க : இரவு 7 மணிக்குப் பிறகு இந்த 5 உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏன் தெரியுமா?
யாருக்கு அதிக ஆபத்து?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு, சிறுநீரக நோய், நீண்டகாலமாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடல்நிலை விரைவாக மோசமடையக்கூடும்.
பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்:
இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, சிறுநீர் குறைவாக வெளியேறுதல், அதிக காய்ச்சல், கடுமையான தாகம்,
வாய் உலர்தல், மயக்கம் அல்லது குழப்ப நிலை, மிகுந்த பலவீனம்.
தொற்றைத் தடுப்பது எப்படி?
உணவு உண்ணும் முன் மற்றும் கழிப்பறை பயன்படுத்திய பின் சோப்பு கொண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பான குடிநீரை மட்டுமே அருந்த வேண்டும்.
மாசடைந்த நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் டயப்பர்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். சமைத்த உணவுகளை சுத்தமாக சேமித்து உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க : உலகை அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ் : அறிகுறிகள் என்னென்ன?
சிகிச்சை என்ன?
பெரும்பாலானோருக்கு ஷிகெல்லா தொற்று 5 முதல் 7 நாட்களுக்குள் தானாகவே குணமாகிவிடும். போதுமான ஓய்வு மற்றும் அதிகளவு திரவ உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால் கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
