கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் பலரும் நேராக ஏசி அறைக்குள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த நேரத்தில் அது உடலுக்கு உடனடி குளிர்ச்சி தந்தாலும், அதுவே சில நேரங்களில் உடல்நல பாதிப்புகளுக்கும் காரணமாக மாறுகிறது.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, வெயிலில் இருந்து வந்த உடல் இயல்பாகவே அதிக வெப்பநிலையுடன் இருக்கும். அந்த நேரத்தில் திடீரென ஏசியின் குளிர்ந்த காற்றில் அமரும்போது, உடலின் வெப்பநிலை சமநிலை பாதிக்கும்.
இதையும் படிங்க : ஏ.சி அறையில் வைக்கக் கூடாத பொருட்கள் – தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
இதனால் சளி, காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு இது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனைத் தவிர்க்க, வீட்டிற்கு வந்தவுடன் முதலில் சாதாரண மின்விசிறி காற்றில் சில நிமிடங்கள் அமர்ந்து உடலை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும். அதன் பிறகு ஏ.சி யை பயன்படுத்த வேண்டும்.
சிலர் இரவு முழுவதும் தொடர்ந்து ஏசியை பயன்படுத்துவார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. அதிக குளிர்ச்சியால் கண் மற்றும் மூக்கு வறட்சி, சுவாச சிரமம், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், தேவைக்கேற்ப வெப்பநிலையை சரிசெய்து பயன்படுத்துவது நல்லது.
