கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பலரும் தர்பூசணியை விரும்பிச் சாப்பிடுவார்கள். அதிக நீர்ச்சத்து கொண்ட இந்தப் பழம் தாகத்தை தணிப்பதுடன், உடலுக்கு புத்துணர்ச்சியும் தருகிறது. அதே தர்பூசணியை வைத்து வீட்டிலேயே எளிமையாக ஐஸ்கிரீம் தயாரிக்கலாம்.
வீட்டில் தயாரிக்கும் ஐஸ்கிரீமில் நமக்குப் பிடித்த சுவையையும், ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் பெற முடியும். அதிலும் இந்த தர்பூசணி ஐஸ்கிரீம் செய்ய மூன்று பொருட்கள் மட்டும் போதும் என்பது கூடுதல் சிறப்பு.
தேவையான பொருட்கள்
தர்பூசணி – 1 பெரிய அளவு
கண்டன்ஸ்டு மில்க் – 500 மில்லி
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படி தயாரிப்பது?
முதலில் தர்பூசணியை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். அதிலுள்ள விதைகளை முழுமையாக நீக்க வேண்டும். பிறகு அந்தத் துண்டுகளை ஒரு தட்டு அல்லது ட்ரேயில் ஒட்டாமல் பரப்பி வைத்து ஃப்ரீசரில் சுமார் 3 மணி நேரம் வைக்கவும்.
தர்பூசணி துண்டுகள் நன்றாக உறைந்த பிறகு, அவற்றை மிக்ஸியில் போடவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும். கலவை கிரீமியான பதத்திற்கு வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும்.
பின்னர் இந்தக் கலவையை ஒரு காற்று புகாத பாத்திரத்தில் ஊற்றி, மேற்புறத்தை சமமாக செய்து மீண்டும் ஃப்ரீசரில் வைக்கவும். குறைந்தது 2 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.
அதிக இனிப்பு வேண்டாம் என்றால் கண்டன்ஸ்டு மில்க் அளவை குறைக்கலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும் இதை வழங்கலாம். இந்த கோடையில் வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்து குடும்பத்துடன் ருசித்து மகிழலாம்.
