மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு : யார் இவர்?

சென்னையின் முக்கியமான நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான கொளத்தூரில் இந்த முறை எதிர்பாராத அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக அந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்த மு.க ஸ்டாலின் இம்முறை தோல்வியை சந்தித்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் வி.எஸ். பாபு வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்து இறுதியில் வெற்றி பெற்றார். இந்த முடிவு மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 2026 தேர்தலில் திமுகவின் பின்னடைவுக்கு இதுதான் காரணம்

வி.எஸ்.பாபு அரசியலில் புதியவர் அல்ல. ஒரு காலத்தில் அவர் தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும், வடசென்னை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியவர். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கொளத்தூர் தொகுதி உருவானபோது, மு.க ஸ்டாலின் அங்கு போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவரது வெற்றிக்காக முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவராக வி.எஸ்.பாபு கருதப்பட்டார். ஆனால், குறைந்த வாக்கு வித்தியாசம் காரணமாக கட்சி தலைமையில் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், வடசென்னை தி.மு.க. அமைப்பு P. K. சேகர் பாபு வசம் சென்றது. இதனால் கட்சியில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு, அ.தி.மு.க. வில் இணைந்தார். அங்கும் எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்காததால், சில மாதங்களுக்கு முன்பு விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைந்தார்.

இதையும் படிங்க : முதல் தேர்தலிலேயே வரலாற்று சாதனை : த.வெ.க வுக்கு கிடைத்த வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

முதல்வரை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பு கிடைத்ததும், வெற்றி சாத்தியமா என்ற எண்ணமே இல்லாமல் தீவிரமாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. இப்போது, அரசியல் வட்டாரங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், வி.எஸ்.பாபு வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.

ஒரு காலத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றிக்காக உழைத்த வி.எஸ்.பாபு, இன்று அவரையே வீழ்த்தியிருப்பது அரசியலில் நிகழும் திருப்பங்களின் ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

Latest News