கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் ஏர் கண்டிஷனர் (ஏசி) பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மாதாந்திர மின்சாரக் கட்டணமும் அதிககரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைகின்றனர். இதனை தவிர்க்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் மின் செலவைக் குறைக்க முடியும்.
24°C – சிறந்த வெப்பநிலை
ஏசியை மிகவும் குறைந்த வெப்பநிலையில் (18°C ) பயன்படுத்துவது மின்சார பயன்பாட்டை அதிகரிக்கும். அதற்கு பதிலாக, 24°C முதல் 26°C வரை வைத்தால் மின்சாரத்தை சேமிக்க முடியும். வெப்பநிலையை ஒவ்வொரு டிகிரி உயர்த்தும் போது சுமார் 6% மின்சாரம் சேமிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஃபேன் பயன்படுத்தும் நன்மை
ஏசி இயங்கும் போது சீலிங் ஃபேனை குறைந்த வேகத்தில் இயக்குவது குளிர்ந்த காற்றை அறை முழுவதும் பரப்ப உதவும். இதனால் ஏசியின் கம்ப்ரஸர் மீது அழுத்தம் குறைந்து, மின்சாரச் செலவு குறையும்.
பராமரிப்பு அவசியம்
ஏசியின் ஏர் ஃபில்டர்களை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும். தூசி படிந்த ஃபில்டர்கள் ஏசியின் செயல்திறனை குறைத்து, அதிக மின்சாரத்தை உபயோகிக்க வைக்கும். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வதும் முக்கியம்.
அறையின் குளிர்ச்சியை பாதுகாக்கவும்
வெயிலின் வெப்பம் அறைக்குள் நுழையாமல் இருக்க ஜன்னல் திரைகளை மூடி வைக்க வேண்டும். கதவுகள், ஜன்னல்கள் சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். இதனால் குளிர்ந்த காற்று வெளியேறாமல் பாதுகாக்கலாம்.
ஸ்லீப் மோடு பயன்பாடு
இரவு நேரங்களில் ‘Sleep Mode’ வசதியை பயன்படுத்துவது நல்லது. இது தானாகவே வெப்பநிலையை சீரமைத்து, தேவையற்ற மின்சார பயன்பாட்டை குறைக்க உதவும்.
