இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மழை சீராக பெய்யாதது கவலைக்குரிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக செயற்கைக்கோள் தரவுகள், இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லை என்றும், ‘எல் நினோ’ தாக்கம் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 4ஆம் தேதி கேரளம் மாநிலத்தில் தொடங்கியது. அதன் பிறகு இந்தியாவின் வடமேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. ஆனால் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இன்னும் தொடர்ச்சியான மழை இல்லை.

மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, ஜூன் மாதத்தின் முதல் பாதியில் அந்த மாநிலம் பெற வேண்டிய மழையில் வெறும் 26 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே பருவமழையின் பலவீனமான நிலையை வெளிப்படுத்துகிறது.
ஐரோப்பிய வானிலை அமைப்பான யூமெட்சாட் இயக்கும் மீடியோசாட் செயற்கைக்கோள் தரவுகள், வங்காள விரிகுடா பகுதியில் மேகக்கூட்டங்கள் அதிகமாக இருப்பதால் ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் மழை இயல்பாக பெய்து வருவதை காட்டுகின்றன. ஆனால் அரபிக்கடல் வழியாக வரும் பருவமழை கிளை பலவீனமடைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதனால் மேற்கு இந்திய மாநிலங்களில் தொடர்ச்சியான மழைக்கு பதிலாக இடைவெளி விட்டு மழை பெய்யும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தரவுகள், இந்தியாவுக்கு ஈரப்பதத்தை இழுத்து வரும் முக்கிய வளிமண்டல அமைப்பான வெப்பமண்டல இடை ஒருங்கிணைப்பு மண்டலம் (ITCZ) இந்த முறை பலவீனமாக வடக்கே நகர்வதை காட்டுகின்றன. இதனால் பருவமழை வேகம் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட பலவீனமாக இருக்கும் என ஏற்கனவே கணித்திருந்தது. சராசரி அளவின் 90 சதவீதம் மட்டுமே மழை கிடைக்கும் என அது தெரிவித்துள்ளது.
முக்கியமாக ‘எல் நினோ’ நிலை உருவானால், இந்தியாவில் மழை அளவு மேலும் குறையும் அபாயம் உள்ளது. மத்திய வேளாண்துறை தகவலின்படி, தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பருவமழை விவசாயத்திற்கும் குடிநீர் நிலைக்கும் பெரிய சவாலாக மாறக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது தற்போது தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
