இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இரண்டாவது மகனும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷிதா ராஜபக்சே, அந்நாட்டின் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் யோஷிதா ராஜபக்சே சேர்ந்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் அவருக்குச் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று விசாரணைக்கு வந்த யோஷிதாவை அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில், கடற்படையில் சேருவதற்குத் தேவையான அறிவியல் அல்லது கணிதப் பிரிவு கல்வித் தகுதி யோஷிதாவிடம் இல்லை என்பதும், அவர் கலை (Arts) பிரிவில் படித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவருக்காகவே கடற்படை விதிகள் மற்றும் தகுதிகள் தளர்த்தப்பட்டு, புதிய விளம்பரம் கொடுக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தகுதி இல்லாத அவருக்கு, அரசுப் பணத்தைக் கோடிக்கணக்கில் செலவு செய்து பிரிட்டனின் ராயல் கடற்படை கல்லூரியில் 18 மாதங்கள் உயர் பயிற்சி அளிக்க இலங்கை அரசு ஏற்பாடு செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அந்நாட்டின் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏற்கனவே கடந்த 2025ஆம் ஆண்டு தனது பாட்டி பெயரில் சட்டவிரோதமாக சொத்து வாங்கிய பணமோசடி வழக்கிலும் யோஷிதா கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
