அரசின் வரவு-செலவு, கடன் சுமை, நிதி இருப்பு உள்ளிட்ட முக்கிய தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமே ‘வெள்ளை அறிக்கை’ எனப்படுகிறது.
வெள்ளை அறிக்கை என்பது அரசின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை தொடர்பான தகவல்களை வெளிப்படையாக மக்களிடம் எடுத்துரைக்கும் ஆவணமாகும். அரசின் நிர்வாகம் மற்றும் நிதி விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெளிவான விளக்கத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த அறிக்கையில் மாநிலத்தின் வரவு-செலவு கணக்குகள், நிலுவைக் கடன்கள், நிதி பற்றாக்குறை, அரசின் நிதி நிலை மற்றும் எதிர்கால நிதி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெறும். இதன் மூலம் அரசின் உண்மையான நிதி நிலவரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.
‘வெள்ளை அறிக்கை’ என்பது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ‘White Paper’ என்ற சொல்லின் தமிழாக்கமாகும். ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின் தகவலின்படி, ‘White Paper’ என்ற சொல் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் சட்டப் பள்ளி விளக்கத்தின்படி, பொதுமக்கள் அணுகக்கூடிய அதிகாரப்பூர்வ ஆவணங்களே ‘White Paper’ என அழைக்கப்பட்டன. காலப்போக்கில் இந்த நடைமுறை அரசியல் மட்டுமின்றி வணிகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 2001ஆம் ஆண்டு அப்போது அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி. பொன்னையன், மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை பட்ஜெட்டுடன் வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் நீண்ட காலமாக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கைகள் வெளியாகவில்லை.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை நேற்று (ஜூன் 16) வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தின் கடன் ரூ.13.18 லட்சம் கோடியா? வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
