ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி நதியில் கிடைக்கும் ‘புலாசா’ என்ற அரிய வகை மீன், இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த மீன்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த மீன் பருவகாலத்தில் மட்டுமே கிடைக்கும். இதனுடைய விலை ஒரு கிலோ ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை விற்பனையாகும். பெரிய அளவிலான மீன்கள் ரூ.20,000-க்கும் அதிகமாக ஏலத்தில் விற்கப்படுகின்றன.
ஏன் இவ்வளவு விலை?
புலாசா என்பது தனி மீன் இனம் அல்ல. இது இலிஷ் மீனின் ஒரு வடிவமாகும். வங்காள விரிகுடாவில் வாழும் இந்த மீன், இனப்பெருக்கத்திற்காக கோதாவரி நதியின் நன்னீருக்குள் மேல்நோக்கி நீந்தி வரும் போது அதன் உடலில் கொழுப்புச் சத்து, சுவை மற்றும் அமைப்பு மாறுகிறது. இந்த மாற்றத்திற்குப் பிறகே அந்த மீன் ‘புலாசா’ என்று அழைக்கப்படுகிறது.
ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் பகுதி அருகே பிடிக்கப்படும் புலாசா மீன்களே மிகவும் தரமானதாக கருதப்படுகின்றன. இதில், சுவையும் கொழுப்புச் சத்தும் அதிகரிப்பதாக சமையல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மீன் பொதுவாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டுமே கிடைக்கும். இரண்டு மாதங்கள் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
இதையும் படிங்க : எஸ்கலேட்டர் ஓரத்தில் இருக்கும் பிரஷ் எதற்காக? பலருக்கும் தெரியாத உண்மை
புலாசா எப்படி சமைக்கப்படுகிறது?
ஆந்திராவில் புலாசாவுக்கு ஒரே பாரம்பரிய உணவு வகைதான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதுதான் ‘புலாசா புலுசு’. இந்த குழம்பு புளி, இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் மிகக் குறைந்த அளவு மசாலாவுடன் தயாரிக்கப்படுகிறது.
பாரம்பரிய முறையில், இந்த குழம்பு 16 முதல் 17 மணி நேரம் வரை மெதுவாக சமைக்கப்படுகிறது. இதனால் மீனின் சிறிய எலும்புகள் குழம்பின் சுவை மேலும் அதிகரிக்கும். மறுநாள் இந்த குழம்பு இன்னும் சுவையாக இருக்கும்.
புலாசா மீன் வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல. அது ஆந்திர மக்களின் பாரம்பரியம், குடும்ப உறவுகள் மற்றும் உணவுக் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது.
இதையும் படிங்க : உங்களை மட்டும் கொசுக்கள் அதிகம் கடிக்கிறதா? ஆய்வுகள் சொல்லும் காரணங்கள்!
