அரசியலில் அடிக்கடி பேசப்படும் ‘குதிரை பேரம்’ என்றால் என்ன?

அரசியல் விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் சொற்களில் ஒன்று ‘குதிரை பேரம்’. குறிப்பாக சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபித்தல், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுதல் அல்லது ஆட்சி அமைக்கும் சூழல்கள் உருவாகும்போது இந்த வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமீப காலமாக தமிழக அரசியலிலும் இந்த சொல் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

ஆனால், ‘குதிரை பேரம்’ என்பது உண்மையில் என்ன? இந்த சொல்லுக்கு அரசியலுடன் என்ன தொடர்பு? அதன் வரலாறு என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.

குதிரை பேரம் என்றால் என்ன?

பண்டைய காலங்களில் மன்னர்களின் படையில் குதிரைப்படை மிக முக்கிய பங்கு வகித்தது. போரில் வெற்றி பெறுவதற்கும், விரைவாக நகர்வதற்கும் குதிரைகள் முக்கிய ஆயுதமாக கருதப்பட்டன. போர் முடிந்த பிறகு ஆயிரக்கணக்கான குதிரைகளை அரசர்கள் தொடர்ந்து பராமரிப்பது செலவான ஒன்றாக இருந்தது. இதனால், தங்கள் நாட்டில் வசதி படைத்த செல்வந்தர்கள் மற்றும் குடிமக்களிடம் அந்த குதிரைகளை ஒப்படைத்து பராமரிக்கச் செய்வது வழக்கமாக இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அடுத்த போர் நடைபெறும் வரை அவற்றுக்கு உணவு அளித்து பாதுகாப்பது, உடல்நலத்தை பேணுவது போன்ற பொறுப்புகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. போர் தொடங்குவதற்கு முன்பு எதிரி நாடுகள், இவ்வாறு தனிநபர்களிடம் பராமரிக்கப்பட்ட குதிரைகளை தங்கள் வசப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

அதற்காக பணம், பரிசு, அதிகார வாக்குறுதி போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. சில நேரங்களில் மிரட்டல் அல்லது மறைமுக நடவடிக்கைகள் மூலமும் குதிரைகளை கைப்பற்ற முயற்சிகள் நடைபெற்றதாக வரலாற்று விளக்கங்கள் கூறுகின்றன. பணம் மற்றும் பல்வேறு ஆசைகளை காட்டி குதிரைகளை தங்கள் பக்கம் மாற்றும் இந்த நடைமுறையே பின்னர் ‘குதிரை பேரம்’ என்ற சொல்லுக்கு அடிப்படையாக அமைந்ததாக கருதப்படுகிறது.

அரசியல் குதிரை பேரம் என்றால் என்ன?

இந்திய அரசியலில், குறிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு, கூட்டணி மாற்றம், ஆட்சி அமைத்தல் அல்லது ஆட்சியை காப்பாற்றும் முயற்சிகள் போன்ற முக்கிய தருணங்களில் ‘குதிரை பேரம்’ என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுகிறது.

ஒரு அரசியல் கட்சி ஆட்சியை அமைக்க அல்லது பெரும்பான்மையை தக்க வைத்துக்கொள்ள மற்றொரு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அல்லது எம்.பி.க்களை தங்கள் பக்கம் கொண்டு வர முயற்சிக்கும் சூழலை பொதுவாக ‘குதிரை பேரம்’ என்று குறிப்பிடுகின்றனர்.

‘குதிரை பேரம்’ என்ற சொல் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாக மொழியியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆரம்பத்தில் குதிரை வியாபாரிகளின் தந்திரமான பேரம் பேசும் முறையைக் குறித்த இந்த சொல், பின்னர் அரசியல் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Related Post

Latest News