மக்களே நோட் பண்ணிக்கோங்க.., ஜூலை 1 முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல்வேறு நிதி சார்ந்த விதிமுறைகளும், கட்டண அமைப்புகளும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜூலை 1, 2026 முதல் பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

சிலிண்டர் விலை குறையுமா?

பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் புதிய விலையை அறிவிக்கும். சர்வதேச அளவில் நிலவிய ஈரான் போர் சூழல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டு உபயோக மற்றும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ளதால், ஜூலை 1-ஆம் தேதி சிலிண்டர் விலை குறைக்கப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. விலை குறைந்தால் சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டிற்குப் பெரிய நிம்மதியாக இருக்கும்.

வருமான வரி கணக்கு தாக்கல் (ITR) தொடக்கம்

2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31, 2026 ஆகும். எனவே, மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோர் அனைவருக்கும் இந்த ஜூலை மாதம் மிக முக்கியமானதாகும். ஜூலை 31-க்குள் ஐடிஆர் தாக்கல் செய்யத் தவறினால், கடுமையான அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு நற்செய்தி!

மின்னஞ்சல் முகவரியை ஆதாருடன் இணைக்க அல்லது அப்டேட் செய்ய நினைப்போருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரை ஆதார் மொபைல் ஆப் மூலம் மின்னஞ்சல் முகவரியை முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 75 கட்டணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு

புதிதாகப் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஜூலை 1 முதல் கூடுதல் செலவு காத்திருக்கிறது. சாதாரண மற்றும் தட்கல் முறையிலான பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான சேவை கட்டணங்கள் முறையே ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 என உயர்த்தப்பட உள்ளன. இந்தக் கட்டண உயர்வில் இருந்து தப்பிக்க விரும்புவோர் உடனடியாக விண்ணப்பிப்பது பணத்தை மிச்சப்படுத்த உதவும்.

ரயில்வேயின் புதிய விதிகள் மற்றும் அபராதங்கள்

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வரும் ஜூலை 15 முதல் புதிய பொலிவுடன் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதே வேளையில், ரயில் பயணிகளுக்கான பாதுகாப்பு விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ரயில்களில் ஆபத்தான பொருட்களைக் கொண்டு சென்றால் விதிக்கப்படும் அபராதம் ரூ. 250-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆர்பிஐ-யின் புதிய நிதி மோசடி தடுப்பு விதிகள்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி, தவறான நிதித் திட்டங்களை விற்பனை செய்வதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி விதிகளைக் கொண்டு வருகிறது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் இந்த விதியின்படி, தவறான வழிகாட்டுதலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களின் இழப்பீட்டையோ அல்லது பணத்தையோ திரும்பப் பெறும் சட்டப்பூர்வ உரிமையைப் பெறுவார்கள்.

Related Post

Latest News