ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் : இதில் அப்படி என்ன இருக்கு?

தற்போது இந்தியாவில் பெரும்பாலான ரயில்கள் மின்சாரம் அல்லது டீசல் மூலம் இயக்கப்படுகின்றன. குறிப்பாக மின்மயமாக்கப்படாத வழித்தடங்களில் டீசல் ரயில்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் கார்பன் வெளியீட்டைக் குறைத்து, சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தை உருவாக்கும் நோக்கில் ஹைட்ரஜன் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் ரயில் எப்படி செயல்படுகிறது?

இந்த ரயிலில் அதிக அழுத்தத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன், எரிபொருள் செல்கள் (Fuel Cells) மூலம் மின்சாரமாக மாற்றப்படுகிறது. இந்த மின்சாரம்தான் ரயிலின் இன்ஜினை இயக்குகிறது.

ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருளுடன் லித்தியம் பெரோபாஸ்பேட் பேட்டரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் நான்கு பவர் பேக் அமைப்புகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பவர் பேக்கும் சுமார் 300 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதில் ஒரு பகுதி ஹைட்ரஜன் எரிபொருள் செல்களில் இருந்தும், மீதமுள்ள மின்சாரம் பேட்டரிகளிலிருந்தும் கிடைக்கிறது.

ரயில் வேகமாக செல்லும்போது இந்த இரு சக்தி மூலங்களும் இணைந்து செயல்படும். நிலையங்களில் நிற்கும் நேரத்தில் பேட்டரிகள் மீண்டும் சார்ஜ் செய்யப்படும் வகையில் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏன் முக்கியம்?

டீசல் ரயில்களைப் போல கரும்புகை அல்லது கார்பன் டைஆக்சைடு வெளியிடாமல், ஹைட்ரஜன் ரயிலில் வேதி வினைக்குப் பிறகு நீராவி மட்டுமே வெளியேறும். இதனால் காற்று மாசு கணிசமாக குறையும்.

மேலும், மின்கம்பிகள் அமைப்பது சிரமமான அல்லது அதிக செலவு தேவைப்படும் ரயில்வே வழித்தடங்களில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய இருப்புப் பாதை அமைக்க வேண்டிய அவசியமின்றி ஏற்கனவே உள்ள பாதைகளிலேயே இந்த ரயிலை இயக்க முடியும்.

திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டம் 2020-21 நிதியாண்டில் சுமார் ரூ.136 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2022 ஏப்ரலில் வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. தொழில்நுட்ப சோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பயணிகள் சேவைக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரயிலின் திறன் மற்றும் செயல்திறன்

சோதனை ஓட்டமாக இயக்கப்படும் இந்த ரயிலில் 8 பயணிகள் பெட்டிகளும், 2 பைலட் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 682 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

இந்த ரயிலில் சுமார் 460 கிலோ ஹைட்ரஜன் சேமிக்கப்படும். ஒரு நாளில் இரண்டு முறை இயக்கப்படும்போது சுமார் 300 கிலோ ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருமுறை நிரப்பப்பட்ட எரிபொருளில் சுமார் 365 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இந்த ரயிலின் அதிகபட்ச தொழில்நுட்ப வேகம் மணிக்கு 140 கிலோமீட்டர் என்றாலும், தொடக்க சோதனை ஓட்டத்தில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது?

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில், ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் – சோனிபட் இடையேயான சுமார் 89 கிலோமீட்டர் வழித்தடத்தில் முதற்கட்டமாக இயக்கப்படுகிறது. இந்த பாதை எதிர்காலத்தில் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தின் செயல்திறனை மதிப்பிடும் முக்கிய சோதனை வழித்தடமாக இருக்கும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?

ஹைட்ரஜன் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருள் என்பதால், பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் ஹைட்ரஜன் கசிவைக் கண்டறியும் சென்சார்கள், தீ தடுப்பு கருவிகள், தொடர்ச்சியான கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், இந்த ரயிலை இயக்குவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சோதனை ஓட்டத்தின் போது தொழில்நுட்ப நிபுணர்களும் ரயிலுடன் பயணிப்பார்கள். பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் அனுமதியுடனேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் ரயிலின் சவால்கள்

ஹைட்ரஜன் எரிபொருளை பாதுகாப்பாக சேமித்து, தேவையான இடங்களுக்கு கொண்டு செல்வதே இந்த திட்டத்தின் மிகப்பெரிய சவாலாக கருதப்படுகிறது.

இதற்காக ஜிந்த் ரயில் நிலையத்தில் சுமார் 3,000 கிலோ கொள்ளளவு கொண்ட ஹைட்ரஜன் சேமிப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனை குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பாக வைத்திருக்க குளிரூட்டும் அமைப்புகளும் தேவைப்படுகின்றன.

உலக நாடுகளின் வரிசையில் இந்தியா

உலகளவில் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்திய நாடுகளில் ஜெர்மனி முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன.

இப்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைவதன் மூலம், பசுமை போக்குவரத்து தொழில்நுட்பத்தில் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால், எதிர்காலத்தில் மின்மயமாக்கப்படாத பல ரயில்வே வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Related Post

Latest News