மேற்கு ஆசியப் பகுதியில் தொடர்ந்து நீடித்து வரும் பதற்றமான சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேற்கு ஆசியப் பகுதியில் தொடர்ந்து நீடித்து வரும் பதற்றமான சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் நேரடிப் பாதிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சி தொடர்ந்தால், ஒரு டாலரின் மதிப்பு விரைவில் 100 ரூபாயை தாண்டும் என உலகளாவிய நிதி நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான கச்சா எண்ணெய் இறக்குமதிவழியாக நாட்டின் பணப்புழக்கம் பெருமளவில் வெளியேறுவதும், இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அதிவேகமாகத் திரும்பப் பெற்று வருவதும் இந்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து பெரும் தொகை வெளியேற்றப்பட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் ரூபாய் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன. கோடக் மகிந்திரா, எச்.எஸ்.பி.சி மற்றும் டி.பி.எஸ் போன்ற முன்னணி வங்கிகளும் தங்களுடைய முந்தைய கணிப்புகளை மாற்றி, ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.
