தமிழகத்தில் சொத்துப் பத்திரப்பதிவின் போது முந்தைய அசல் ஆவணங்களைக் கட்டாயமாக்கும் பதிவு விதிகளின் ‘34C’ பிரிவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், இனி அசல் பத்திரம் இல்லாவிட்டாலும் தடையின்றிப் பத்திரப்பதிவு செய்யலாம்.
34C விதி சொல்வது என்ன?
தமிழகத்தில் போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்கவும், முறைகேடுகளைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு ‘Registration (Tamil Nadu Amendment) Act, 2025’ என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத் திருத்தத்தின் ஒரு பகுதியாகப் பதிவு விதிகளில் ‘34C’ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. கடந்த ஜனவரி 23, 2026 அன்று இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த விதியின்படி, ஒரு சொத்தைப் பதிவு செய்ய முந்தைய அசல் ஆவணம் கட்டாயமாக்கப்பட்டது. இந்த புதிய சட்ட நடைமுறையால், எதிர்பாராதவிதமாக அசல் ஆவணங்களை தொலைத்தவர்கள் அவசரத் தேவைகளுக்குக் கூட சொத்துக்களை விற்க முடியாமல் தவித்தனர்.
நீதிமன்றம் சென்ற வழக்கு
இந்த சட்டவிதியை எதிர்த்து கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சொத்துரிமை (பிரிவு 300-A) மற்றும் சமத்துவ உரிமைக்கு எதிரானது என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பின் 34C பிரிவை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டது.
இனி அசல் பத்திரம் இல்லாவிட்டால் எப்படி பதிவு செய்வது?
சொத்து பரிமாற்றச் சட்டம் பிரிவு 55-ன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள இதர தகுதியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, எவ்வித தடையுமின்றி சார்பதிவாளர் அலுவலகங்களில் இனி பத்திரப்பதிவு செய்யலாம்.
