தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.
இந்திய அரசியலில் ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டு, சிறிது காலத்திலேயே மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
1972-ல் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர், 1977-ம் ஆண்டு பொதுத்தேர்தலை சந்தித்தார். அதில் அ.தி.மு.க. 155 தொகுதிகளில் போட்டியிட்டு, 130 வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மொத்தம் 30.36 சதவீத வாக்குகளைப் பெற்றது.
1982ம் ஆண்டில் ஆந்திராவில் என்.டி.ஆர் கட்சி தொடங்கிய 9 மாதங்களிலேயே தேர்தலை சந்தித்தார். அவரது தெலுங்கு தேச கட்சி 289 தொகுதிகளில் 201 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் 46.30 சதவீதம் வாக்குகள் கிடைத்தது.
2012-ல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலாகக் களம் கண்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28ல் வென்றது. மொத்தம் 29.49 சதவீத வாக்குகளை பெற்றது.
இந்த பட்டியலில் விஜய் 4 வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த ஆண்டு (2026) நடைபெற்ற தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இதில் 108 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
பெரம்பூரில் 53,715 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கில் 27,416 வாக்குகள் வித்தியாசத்திலும் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 34.92 சதவீத வாக்குகள் தவெக வுக்கு கிடைத்துள்ளது.


