ஹார்முஸ் ஜலசந்தி அருகே கப்பலில் தீ விபத்து : இந்தியாவை சேர்ந்த மாலுமி ஒருவர் பலி

ஹார்முஸ் ஜலசந்தி அருகே இந்தியர்கள் சென்ற சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதில் இந்தியாவை சேர்ந்த மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

பொதுச் சரக்குகளை ஏற்றி சென்ற மரத்தால் செய்யப்பட்ட அந்த கப்பலில் மொத்தம் 18 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். வெள்ளிக்கிழமை இரவு கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவியதால் கப்பல் கடலில் கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : த.வெ.க. ஆட்சி அமையுமா? வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? குழப்பத்தில் தமிழக அரசியல்

இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் நால்வருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீதமுள்ள 17 இந்திய மாலுமிகள் அருகில் சென்ற மற்றொரு கப்பலின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீட்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest News