குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம் : ஸ்மார்ட் போன் காரணமா? ஆய்வு சொல்லும் ஷாக் தகவல்

ஒரு காலத்தில் இந்தியாவில் பெண்கள் சராசரியாக மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை இரண்டு குழந்தைகளாக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் இதே நிலை உருவாகி உள்ளது.

குடும்ப சூழல், வேலை அழுத்தம், தாமதமான திருமணம் போன்ற காரணங்களே குழந்தை பிறப்பு குறைவுக்கு காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கைப்பேசி பயன்பாடு மற்றும் இணைய தளங்கள் மனிதர்களின் உறவுமுறையையே மாற்றி வருவதாக புதிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வில், அதிவேக இணைய சேவை முதலில் அறிமுகமான பகுதிகளில் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் நேரில் சந்தித்து பழகும் பழக்கம் குறைந்துள்ளது. பெரும்பாலான நேரத்தை இணையத்தில் செலவிடத் தொடங்கியதே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

2007-க்கு பிறகு கைப்பேசிகள் மற்றும் செயலிகள் பரவலாக பயன்படுத்தப்படத் தொடங்கிய காலத்திலிருந்தே பல நாடுகளில் இளைஞர்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் திடீரென சரிந்துள்ளது. அதிகமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இளம் தலைமுறையினரிடையே நீண்டகால உறவுகள் உருவாகுவதும் சிரமமாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமூக வலைதளங்களில் மற்றவர்களின் வாழ்க்கையை தொடர்ந்து பார்ப்பது, பொருளாதார அச்சம், வேலை பற்றிய பயம் போன்றவை மனஅழுத்தத்தை உருவாக்குகின்றன. இதனால் குடும்ப வாழ்க்கைக்கு தயாராக இல்லை என்ற எண்ணம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி மட்டும் இதற்கான ஒரே காரணம் அல்ல என்றாலும், உலக மக்கள்தொகை மாற்றத்தை அது வேகப்படுத்தி வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் நிலையில் இரு குழந்தைகள் இருந்தால் அவற்றை சரியாக வளர்க்க முடியாது என்பதாலும் இரு குழந்தைகளுக்கும் அவர்களின் தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியாது என்ற காரணத்தால் ஒரு குழந்தை இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Post

Latest News