கோடைக்கால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், புதிய ஏசி வாங்க முடியாத பலர் குறைந்த விலைக்காக பழைய ஏசிகளை தேர்வு செய்கின்றனர். ஆனால் இதில் பல ஆபத்துகள் மறைந்திருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பழைய ஏசிகளில் கம்ப்ரஸர் அதிகம் பாதிக்கப்படும் பகுதி ஆகும். பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டதால் அது பலவீனமடைந்திருக்கும். நீண்ட நேரம் தொடர்ந்து இயக்கினால் அதிக வெப்பம் உருவாகி அழுத்தம் அதிகரித்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் தவறான முறையில் கேஸ் நிரப்புவது அல்லது அதிக அளவில் கேஸ் நிரப்புவது கூட இயந்திரத்தில் ஆபத்தான அழுத்தத்தை உருவாக்கும்.
இதையும் படிங்க : ஏசியால் கரண்ட் பில் அதிகம் வருதா? இந்த தவறை பண்ணாதீங்க
பழைய வயர்கள், உருகிய பிளாஸ்டிக், தளர்ந்த இணைப்புகள் போன்றவை ஷார்ட் சர்க்யூட்டுக்கு காரணமாகலாம். காயில்கள் மற்றும் ஃபில்டர்களில் அழுக்கு அதிகமாக இருந்தால் ஏசி அதிக மின்சாரம் ஏற்பட்டு சூடாகும். இதனால் தீப்பற்றும் அபாயமும் ஏற்படலாம்.
ஏசியில் இருந்து கருகிய வாசனை வருதல், வெளிப்புற யூனிட்டில் அதிக சத்தம் கேட்பது, மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுதல், தண்ணீர் கசிவு அல்லது சீறும் சத்தம் போன்றவை ஆபத்துக்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இவ்வாறான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக ஏசியை அணைத்து பரிசோதனை செய்ய வேண்டும்.
பலர் நீண்ட நாட்கள் பயன்படுத்தாத ஏசியை நேரடியாக இயக்குவது வழக்கம். ஆனால் அதற்கு முன் முழுமையான சேவை செய்வது அவசியம். குறிப்பாக ஸ்ப்ளிட் மற்றும் ஜன்னல் ஏசிகளில் கேஸ் கசிவு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். கேஸ் கசிவு இருந்தால் குளிர்விக்கும் திறன் குறைவதுடன் ஆபத்தும் அதிகரிக்கும்.
அதேபோல் டர்போ முறையை நீண்ட நேரம் பயன்படுத்தாமல், அறை குளிர்ந்த பிறகு சாதாரண நிலைக்கு மாற்ற வேண்டும். ஏசியை இடைவிடாமல் பல மணி நேரம் தொடர்ந்து இயக்குவது இயந்திரம் அதிக வெப்பமடைய காரணமாகலாம்.
மின்சார ஏற்ற இறக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் நல்ல தரமான ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது பாதுகாப்புக்கு அவசியம். இது மின்சார கோளாறுகளிலிருந்து ஏசியை பாதுகாக்கும்.
