சென்னை எழும்பூர்–திருச்செந்தூர் இடையே தினசரி இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று முதல் நவீன எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. புதிய பெட்டிகளால் ரெயிலின் வேகம் அதிகரித்து, பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூர் மற்றும் திருச்செந்தூர் இடையே தினமும் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து வண்டி எண் 20605 மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூரை சென்றடைகிறது.
திருச்செந்தூரில் இருந்து வண்டி எண் 20606 இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.25 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது.
நெல்லை–திருச்செந்தூர் இடையேயான ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பல ரெயில் நிலையங்களில் நடைமேடைகள் நீட்டிக்கப்பட்டதால் ரெயிலில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டன.
இதுவரை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 23 பழைய பெட்டிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அவற்றுக்கு பதிலாக மொத்தம் 21 நவீன எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 11-ல் இருந்து 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் இன்று, ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் புதிய பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரெயிலில் நாளை, ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இடம்பெறும்.
புதிய எல்.எச்.பி. பெட்டிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 110 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை–திருச்செந்தூர் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
