லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதால் சர்ச்சை

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் தொடர்புடைய நகராட்சி வருவாய் ஆய்வாளருக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான நற்சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 3-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.3.66 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் ஜிபே வாயிலாக சுமார் ரூ.25 லட்சம் பணம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்தப் பணப் பரிவர்த்தனைகளுக்கு உரிய கணக்கு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில், சுதந்திர தின விழாவில் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. லஞ்ச வழக்கில் தொடர்புடைய அதிகாரிக்கு சிறப்புப் பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழும்பியது.

கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது தெரியவந்ததும், அவருக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டது.

Related Post

Latest News